Followers

Thursday, August 07, 2014

வஹாபியம் தலைதூககுவதால் தமிழகம் பாதிக்கப்படுமா?

திரு வியாசன்!

//உதாரணமாக, தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லீம்கள் இன்னும் தம்மைத் தமிழர்கள் என்று வாதாடினாலும் கூட இலங்கை முஸ்லீம்கள் தமிழைத் தாய் மொழியாகப் பேசினாலும் அவர்களில் பெரும்பான்மையானோரின் முன்னோர்கள் தமிழ்/மலையாள முஸ்லீம்களாக இருந்தாலும் கூட அவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. மத அடிப்படையில் முஸ்லீம்கள் என தம்மைத் தனிப்பட்ட இனமாகத் தான் அடையாளப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வரும் அரபு மயமாக்கலும், வஹாபி இஸ்லாமும் அப்படி ஒரு நிலையை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தலாம், என்பதை நான் பலமுறை தெரிவித்துள்ளேன்.//

உங்களின் கூற்று தவறானது. 20 வருடங்களுக்கு முன்னால் அரபு மொழியை தேவ மொழியாக நான் நினைத்திருந்தேன். அவ்வாறுதான் எனக்கும் முன்பு சொல்லப்பட்டிருந்தது. தமிழ் மொழி இந்துக்கள் மொழி என்ற தவறான எண்ணமும் எனக்குள் இருந்தது. நாமெல்லாம் வட நாட்டிலிருந்து குடி பெயர்ந்தவர்கள் என்றே ரொம்ப காலம் நினைத்திருந்தேன். தவ்ஹீத்(ஓரிறை சிந்தனை) உங்களின் பார்வையில் வஹாபிய சிந்தனை வந்த பிறகுதான் உலக மொழிகள் அனைத்துமே சம தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டும். அதைத்தான் குர்ஆனும் சொல்கிறது என்ற எண்ணமே வர ஆரம்பித்தது. அதன் பிறகுதான் நான் தமிழை இன்னும் அதிகமாக நேசிக்கத் தொடங்கினேன்.

தாய் நாட்டுப் பற்றும், தாய் மொழிப் பற்றும் எனக்குள் அதிகம் ஏற்பட்டதே வஹாபிய சிந்தனை எனக்குள் ஏற்பட்டப் பிறகுதான்.

இந்து மக்களையும் கிறித்தவ மக்களையும் விரோதியாக பார்த்த பார்வை போய் அவர்களும் நமது சகோதரர்களே! அவர்களில் ஒரு சிலர் அறியாமல் தவறிழைத்தால் அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் நாம் வெறுக்கலாகாது என்ற எண்ணம் ஏற்பட்டதும் இந்த வஹாபிய சிந்தனை வந்தவுடன்தான்.

முன்பு இஸ்லாமிய வீடுகளில் அரபு குர்ஆன் மாத்திரமே இருக்கும். அதனை அர்த்தம் புரியாமல் பய பக்கதியோடு முஸ்லிம்கள் ஓதுவார்கள். அந்த குர்ஆனுக்கு மரியாதை செய்யவும் தவற மாட்டார்கள். இந்துக்கள் மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தல் பாவம் என்று மார்க்க கட்டளைகளை வேறு அன்று போட்டு வைத்தார்கள். ஆனால் வஹாபிய சிந்தனை வந்தவுடன் குர்ஆனை தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தனர். குர்ஆன் மனிதர்களோடு என்ன பேசுகிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய முற்பட்டான். ரஜினிக்கும் கமலுக்கும் ரசிகர் மன்றங்களை வைத்த இஸ்லாமிய இளைஞர்கள் மன்றங்களைக் களைத்து விட்டு குர்ஆனை ஆராய புகுந்தது இந்த வஹாபிய சிந்தனை வந்த பிறகுதான். இன்று ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் தமிழ் குர்ஆனை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் வஹாபியம் வந்ததனால் தமிழுக்கு கிடைத்த பெருமை இது.

எனது திருமணத்துக்காக நான் தமிழகம் வந்த போது எனது தாயார் 'நல்ல வேளை ! நீ சவுதி போயிட்டே! இங்கே உன் வயசு பசங்களெல்லாம் பிஜேயின் பின்னால் நின்று கொண்டு ஊரை பகைத்துக் கொண்டுள்ளார்கள். நீ அந்த மாதிரி எல்லாம் போய் விடாதே' என்று அறிவுறுத்தினார். ஆனால் சிடிக்களாகவும், ஆடியோ கேசட்களாகவும் தினமும் ஒரு மணி நேரம் சவுதியில் எனது பொழுது கழிந்ததே பிஜேயின் பேச்சுக்களால் என்பதையும் வஹாபிய சிந்தனை முழுவதுமாக எனது சிந்தையில் ஏறியுள்ளதையும் பாவம் எனது தாயார் அறிந்திருக்கவில்லை. :-)

வரதட்சணை வாங்கக் கூடாது, திருமணத்துக்கான மாலைகளை நான் போட்டுக் கொள்ள மாட்டேன், திருமண விருந்து நம் வீட்டில்தான் நடக்க வேண்டும், திருமண ஊர்வலங்கள், மருதாணி இடுதல், பாத்திஹா ஓதுதல் என்ற மூடப்பழக்கங்கள் எல்லாம் எனது திருமணத்தில் இருக்கக் கூடாது என்று தகராறு செய்ய ஆரம்பித்தேன். எனது சொந்தக்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். எப்படி இருந்தவன் எப்படி மாறி விட்டான் என்று அதிசயத்தோடு பார்த்தார்கள். திருமண பத்திரிக்கையிலும் பின் பக்கம் வஹாபிய சிந்தனை உடைய வசனங்களையும் நபி மொழிகளையும் பதிந்தேன்.

இங்கும் நமது தமிழரின் பண்பாடுதான் கொண்டு வரப்பட்டது. பெண்ணிடம் சீதனம் கேட்கும் இந்த வரதட்சணைக் கொடுமையே நமது தமிழர்களின் பழக்கமல்ல. பெண்ணிடம் வரதட்சணை கேட்கும் வழக்கம் ஆரியர்களின் பழக்கமாகும். அது பிற்காலத்தில் தமிழர்களிடமும் தொற்றிக் கொண்டது.

பெண்ணுக்கு ஆண் மகன் சீதனம் கொடுத்ததாகத்தான் நமது சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதாவது அன்றைய தமிழர்கள் பெண்ணுக்கு மஹர் கொடுத்துள்ளார்கள்.

'தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து மனம் பேசுவார்: பொருள் தந்து விலை பேசுவார்: மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்….. உலகை விலை பேசுவார்……….'

என்று கண்ணதாசன் பாடியதும் அதனால்தான்.

இங்கும் வஹாபியம் வந்து தமிழனின் ஆதி பழக்கத்தை நடைமுறைபடுத்தியுள்ளது.

எனவே ஒருவன் தமிழனாக பிறந்து விட்டால் அவன் எந்த மார்க்கத்துக்கு சென்றாலும் அவன் தமிழன் என்ற இனமாகத்தான் பார்க்கப்படுவான். இன்று வரை எங்கள் வீடுகளில் ஆங்கிலம் கலக்காத அழகிய தமிழைத்தான் பேசுகிறோம்.

பாலஸ்தீனில் கொடுமை நிகழ்த்தப்படுவதால் அதற்காக இங்குள்ள முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில் என்ன தவறு? 'வாசுதேவக குடும்பம்' என்று பண்டைய இலக்கியங்கள் கூறுவது முழு உலக மக்களையும் சேர்த்துதானே! 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று சொன்னதும் இதே தமிழ் காப்பியங்கள் தானே!

இங்கும் பண்டைய தமிழ் நூல்களின் செயல்பாட்டினையே வஹாபியமும் பேசுகிறது.

இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் தமிழில் பெயர் வைப்பதில்லை என்று கேட்கலாம். தமிழில் பெயர் வைக்க குர்ஆன் தடை போடவில்லை. தமிழகத்தில் வைக்காததற்கு காரணம் இங்கு நிலவும் சாதி முறையே. மதம் மாறியவன் அதே பெயரில் தொடர்ந்தால் 'என்ன சாதி' என்ற அடுத்த கேள்வி வரும். பிரபலமான ஏ ஆர் ரஹ்மான் அரபிய பெயரை வைத்ததால் அவரது சாதி என்னவென்பதே மறக்கடிக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை சுத்தமாக மறந்து உலக முஸ்லிம்களில் ஐக்கியமாகி விடும். இன்று என்னுடைய பழைய சாதி என்ன என்பதே எனக்கு தெரியவில்லையே! அத்தகைய சாதிகள் அற்ற சமூகமாக தமிழகம் மாறும் போது எனது பெயரையும் தமிழிலேயே வைத்துக் கொள்வேன்.

எனவே தமிழகத்தில் வஹாபியம் அதிகரித்திருப்பதால் தமிழுக்கோ தமிழ் நாட்டுக்கோ தமிழர்களுக்கோ எந்த இடைஞ்சலும் வந்து விடாது. மாறாக அழிந்த தமிழனின் பழைய வரலாறு புதுப்பிக்கப்படுவதாகவே சொல்லலாம்.


2 comments:

Anonymous said...

வகாபிஸம் முஸ்லிம்களிடம் ஏர்கனவே இருக்கும் மாற்று மதத்தின் மேலுல்ல வெறுப்பை மேலும் இறுக செய்யும். ஆபிரகாமிய மத வெறுப்பு சித்தாந்தத்தை அரபு நாடுகளோடு போகட்டும். மத வெறுப்பு த்மிழ் நம்பிக்கைகளிலும் இந்துநம்பிக்கைகளிலும் இல்லாத ஒன்று. உங்களது வெறுப்பு சித்தாந்தம் எங்களுக்கு தேவை இல்லை.

ஆனந்த் சாகர் said...

வஹாபியம் எங்கு தலைதூக்குகிறதோ அந்த நாடு கற்காலத்திற்கு சென்றுவிடும்.